சோமவார பிரதோஷத்தின் சிறப்பு மற்றும் வழிபாட்டு முறைகள் | Specials and Rituals of Somavara Pradosha
சோமவார பிரதோஷத்தின் சிறப்பு மற்றும் வழிபாட்டு முறைகள் :
பிரதோஷத்தில் சோமவாரம் (திங்கட்கிழமை) மிகவும் சிறப்பு வாய்ந்தது. சிவபெருமானுக்கு உகந்த நாள் சோமவாரம். திங்கட்கிழமை மட்டுமே சோமவாரம் என்று அழைக்கப்படுகிறது. சோம என்றால் பார்வதியுடனான சிவன் என்றும் சந்திரன் என்றும் பொருள் படும். கொடிய நோயால் அவதிப்பட்ட சந்திரன் தன் நோய் குணமாக வேண்டி சிவபெருமானை நினைத்து தவம் செய்தார்.
சந்திரனின் தவத்தால் மகிழ்ந்த சிவபெருமான், சந்திரனின் நோயை நீக்கி, நவகிரகங்களில் ஒருவராகும் வாய்ப்பை வழங்கினார். பிறகு சந்திரன் பரமேஸ்வரனை நோக்கி, தனது வாரத்தில் மக்கள் விரதம் இருந்து வழிபட்டால் நல்ல பலனைத் தருமாறு வேண்டினார். அதன்படி பிறந்ததே சோமவார விரதம்.
மேலும், இந்த பிரதோஷ நாளில் சந்திர திசை நடப்பவர்களும், சந்திரனை லக்னாதிபதியாக பெற்றவர்களும் கோயிலுக்குச் சென்று பிரதோஷ வழிபாட்டில் கலந்து கொண்டால் மன அமைதியும் மகிழ்ச்சியும் கிடைக்கும்.
பிரதோஷ நேரம் எனப்படும் மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை சிவன் மற்றும் நந்திக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு பூஜைகள், அற்புத வழிபாடுகள் நடைபெறும். இந்த வழிபாட்டில் கலந்து கொண்டால் மன அமைதி கிடைக்கும், மனதில் உள்ள குழப்பங்கள் நீங்கும். நல்ல எண்ணங்கள் மேலோங்கும்.
சோமவார பிரதோஷ நாளில் சிவாலயங்களில் நந்திதேவருக்கு வில்வ அர்ச்சனை, செவ்வரளி, அருகம்புல் மாலை சாற்றி வழிபட்டால் வேண்டுதல் நிறைவேறும்.
எலுமிச்சை சாதம், தயிர் சாதம், சர்க்கரைப் பொங்கல் அல்லது வெள்ளைப் பொங்கல் ஆகியவற்றை இறைவனுக்கு நைவேத்தியம் வைத்து பக்தர்களுக்கு பிரசாதமாக அளித்தால் வாழ்வு வளமாகும்.
விரதமுறை :
பிரதோஷ நாளில் அதிகாலையில் நீராடி, திருநீறு அணிந்து சிவ நாமத்தை உச்சரிக்க வேண்டும். காலை முதல் மாலையில் பிரதோஷம் முடியும் வரை உணவை தவிர்த்துவிட்டு பிரதோஷ தரிசனத்தை முடித்து பிரசாதம் சாப்பிட்டு விரதத்தை முடிக்க வேண்டும். பிறகு இரவு உணவு உண்ணலாம். 11 பிரதோஷங்கள் விரதம் இருந்து சிவனை வழிபட்டால் சிவனின் அருள் கிடைக்கும்.
நந்தி தேவர் வழிபாடு :
பிரதோஷ பூஜையில் நந்திக்கு முதல் அபிஷேகம் செய்யப்படுகிறது. இதில் நந்தி பகவானின் இரு கொம்புகளுக்கு நடுவே சில பெருமானை தரிசிக்க வேண்டும்.
கருவறைக்கு அருகில் உள்ள நந்தியைக் குறுக்கே கடக்கவோ அல்லது தரையில் விழுந்து வணங்குவதோ கூடாது. பிரதோஷ பூஜையில் நந்தி பகவானை வழிபடுவது எல்லா தெய்வங்களையும் வணங்குவதற்கு நிகராகும்.
பிரதோஷ நாளில் என்ன செய்யலாம்? செய்யக்கூடாது?
பிரதோஷ நாட்களில் அபிஷேகத்திற்கு தேவையான பொருட்களை வழங்கலாம். வில்வ இலைகளால் சிவபெருமானை வழிபடுவது சிறப்பான பலனைத் தரும். பிரதோஷ நாட்களில் தயிர் சாதம் பிரசாதமாக வழங்குவது பலன் சேர்க்கும். பசுவிற்கு உணவளிக்க சந்ததி செழிக்கும்.
சிவனையும் நந்தியையும் வணங்கும் போது யாரிடமும் பேச வேண்டாம். எதிர்மறை எண்ணங்களை வெளிப்படுத்தாதீர்கள். சிவ நாமத்தை மட்டும் ஜபிக்கவும். நந்தியை மறைத்து சிவபெருமானை வழிபடாதீர்கள்.
பிரதோஷ பலன்கள் :
தினமும் இரவும் பகலும் கூடும் சந்தியா காலமான மாலையில் சிவனை தரிசனம் செய்வது சிறந்தது. சிவனை தியானிக்க பிரதோஷ நேரம் சிறந்த நேரம். பிரதோஷ பூஜை செய்வதால் அறிவு வளரும், நினைவாற்றல் பெருகும், தோஷங்கள் நீங்கும். எவ்வளவு பெரிய தோஷம் இருந்தாலும் பிரதோஷ காலத்தில் விரதம் இருந்து சிவபெருமானுக்கு பசும்பாலால் அபிஷேகம் செய்து சங்கு பூ வைத்து வழிபட்டால் சிறப்பான பலன் கிடைக்கும்.
நந்தியையும், சிவபெருமானையும் காராம்பாசுவின் பாலைக் கொண்டு வழிபட்டால், பெண்களால் ஏற்பட்ட சாபம், பூர்வ ஜன்ம தோஷங்களும் நீங்கும் என்பது நம்பிக்கை. குழந்தை இல்லாதவர்கள் பிரதோஷ விரதம் செய்தால் குழந்தை பாக்கியம் உண்டாகும். திருமணம் ஆகாத கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும். வறுமை நீங்கி செல்வம் பெருகும். மேலும், வியாபாரம் மேம்படும், கடன் பிரச்சனைகள் தீரும். போட்டித் தேர்வு எழுதுபவர்கள் எளிதில் வெற்றி பெறுவார்கள்.
நாமும் பிரதோஷ காலத்தில் கோயிலுக்குச் சென்று பூஜையில் கலந்து கொண்டு சிவபெருமானின் அருளைப் பெறுவோம்.
